Saturday, May 8, 2010



பச்சை குடைபிடிக்கும்
ஒருவழிச்சாலை

காலை மணி ஒலிக்கும்
மார்கழிவேளை

ஊரார் கூப்பி நிற்கும்
விநாயகர் ஆராதனை
கூட்டமாய் குளிர்காயும்
சொக்கப்பன் ஓலை

குமரிப்பெண்ணின் அதிகாலை
கோலங்கள்

கலப்பையோடு வயல்வெளியில்
உழவன்

வரப்புகளில் வழிந்தொழுகும்
பனித்துளிகள்

ஆதி மனிதனாய் கண்மாய்
குளியல்

ஆலமரத்தின் விழுதில்
ஊஞ்சல் ஆட்டம்

தொலைதூர பள்ளியின்
நடைபயணம்

காத்திருக்கும் விடுமுறை
காலம்

உயர்ந்து நிற்கும்
பனைமரக்கூட்டம்

அடை மழையில்
குடைபிடிக்கும் கோணிப்பை

ஊர்நடுவே ஓடிவரும்
மழைநீர் வெள்ளம்போல்

அரபிக் கடல் கொடுத்த

வியர்வை துளிகளை
பசுமை நினைவுகளால்

உலர்த்திக்கொள்கின்றேன்

அடுக்கு மாடி குடியிருப்பும்
அடைத்துவைத்த குளியலறையும்

கல் பதித்த நடைபாதையும்
கண்டுக்கண்டு கல்லாகிப்போன
எம்நெஞ்சை,

கிராமத்தின் பசுமை நினைவுகள்
கல்லுக்குள் நீர்போல கசிகின்றது.

பிரபுமுருகன்.......................







No comments:

Post a Comment